ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது: கவர்னர் உரையாற்றுகிறார்
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9, 10 ஆகிய 2 நாட்கள் கூடியது. இதில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கூட்டம் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபை கூட்டத் தொடரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். அன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இந்த முறை கவர்னர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம். கடந்த முறை முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டுமே கவர்னர் படித்தார்.
குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடந்தது; இது முதல்முறை அல்ல. தேர்தல், வெள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பேரவையை அதிக நாட்கள் நடத்த முடியவில்லை. பேரவையை 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணம். பேரவை குறைந்த நாட்கள் நடந்தாலும் மக்கள் பணியில் எந்த குறையும் இல்லை. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
சட்டசபையில் கவர்னருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டசபைக்கும் இது பொருந்தும். எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு போதிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.